சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். அவரது சூப்பர் மார்க்கெட்டில் ராஜேஷ் என்பவர் பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
ராஜேஷ், சுரேஷின் நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார். இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் டூத் பிரஷை மாற்ற வந்தபோது, அவரது பில்லில் ஐந்தாயிரம் ரூபாயும், கணினியில் 2 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், தவறாக கணக்கு காட்டி மோசடி செய்த ராஜேஷ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 5 லட்சம் ரூபாய் மட்டுமே தவறாக கணக்கு காட்டி திருடியதாக ராஜேஷ் ஒப்புக்கொண்டார். ஆனால், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, சுமார் 45 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருடிய பணத்தை திருப்பித்தருவதாக ராஜேஷ் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென தலைமறைவாகியுள்ளார்.