சென்னை:அம்பத்தூர் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர் இன்று (டிச.28) காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் கார் ஒன்று அதிவேகமாகவும், அதனை ஓட்டியே ஓட்டுநர் செல்ஃபோனில் பேசியபடி வருவதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து அந்த காரை பின்தொடர்ந்த காவல் துறையினர், விரட்டி அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரில் இருந்த ஓட்டுநரிடம் லைசென்ஸ் வாங்கி விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதன் பிறகு, காவல் துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் முன், பின்பக்க இருக்கையில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை கைப்பற்றிய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையததில் ஒப்படைத்தனர்.