இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 26 லட்சம் பேரை பாதித்து, 2 லட்சம் பேரை பலி கொண்டுள்ள கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் போரில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து, அவற்றின் விற்பனையை அனுமதிக்க புகையிலை நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அதனை மறுத்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்களைக் காக்கும் முயற்சியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மக்களைக் கொல்லும் முயற்சியில் புகையிலை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சாதாரண நாட்களிலேயே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்கள் கரோனா பரவல் காலத்தில் இன்னும் கூடுதலான தீமைகளை ஏற்படுத்தக்கூடும். இதை உணர்ந்து இந்தியாவிலும், புகையிலை நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் இதுபோன்று கோரிக்கைகள் வந்தால், அவற்றை ஆய்வுக்கு கூட ஏற்காமல் மத்திய, மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும். புகைப்பழக்கம் கரோனா பரவலை தீவிரப்படுத்தும் என்பதால், ஊரடங்கிற்குப் பிறகும்கூட, அடுத்த சில மாதங்களுக்கு இந்தியா முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும்.
புகைப்பிடிப்பதற்காக கைகளை வாய்க்கு அருகில் கொண்டு சென்று இழுக்கும் போது, கரோனா வைரஸ் கிருமிகள் வாய் வழியாக நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பவரின் நுரையீரல் ஏற்கனவே சேதமடைந்திருக்கும் என்பதால், கரோனா தாக்கினால் விரைவாக உயிரிழப்பு ஏற்படும் என்றும், அதனால் புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்கு இதுதான் மிகவும் சரியான நேரம் என்றும் பொதுமக்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் மது இல்லாததால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சிகரெட் பிடிக்காததால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. கரோனாவை ஒழிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல பாதிப்புகள் ஏற்பட்டன என்றாலும் கூட புகையும், மதுவும் இல்லாமல் மக்களால் நிம்மதியாக வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு புகை மற்றும் மதுப்பழக்கத்தை முற்றிலுமாகக் கைவிட பொதுமக்கள் முன்வர வேண்டும். அதேபோல், மது மற்றும் புகையிலை வணிகத்திற்கு முற்றிலுமாக தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் குடிபோதையில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா!