தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

40 ஆண்டுக்கால போராட்டம் - வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் அறிக்கை - ramdoss statement

வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா என்பது எங்களின் 40 ஆண்டுக்கால கனவாகும். அது நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி; ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

pmk statement on vanniyar reservation
pmk statement on vanniyar reservation

By

Published : Feb 26, 2021, 10:53 PM IST

சென்னை:வன்னியர் சமூகத்தினருக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிகப் பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டுதான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணியும் கிட்டத்தட்ட இதே மனநிலையில்தான் இருக்கிறார். சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டபோது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்தவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா.... சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்... மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பதுதான்.

இரண்டரை கோடிக்கும் கூடுதலான வன்னியர்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அவர்களின் சமூகநிலையும் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளை அனுபவிக்க முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த அந்த அப்பாவி ஊமை சனங்களுக்கு உரியச் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் 40 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறேன். வன்னியர் சமுதாயமும் என் தலைமையை ஏற்றுக் கொண்டு போராடி வருகிறது. எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம்தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தைப் போற்றுகிறோம். இத்தகைய போராட்டம் மற்றும் தியாகங்களைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, வன்னியர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக 108 சமுதாயங்களை ஒன்றிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வன்னியர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார். அதன் விளைவாக வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுக்க இன்னும் 32 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு 32 ஆகும் போதிலும் கூட வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளில் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைக்கிறது. குரூப்-2 பணிகளில் 4% மட்டுமே வன்னியர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. குரூப்-3 பணிகளில் அதிகபட்சமாக 5 விழுக்காடும், குரூப்-4 பணிகளில் 5 முதல் 6 விழுக்காடு மட்டுமே வன்னியர்களுக்குக் கிடைக்கிறது. இதனால், வன்னியச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான், 40 ஆண்டுகளாகத் தொடரும் வன்னியர்களுக்கான இடப்பங்கீடு போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியிருந்தது.

தொடர்ந்து 3 கட்டங்களாகத் தமிழ்நாடு அரசு குழு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குழுவினரிடையே பேச்சுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நான், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாமக கொள்கை என்ற வகையில் இந்தத் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.

வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இதுகுறித்து தமிழ்நாடு அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது. சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாமக வென்றெடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details