சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பொருளாளர் திலகபாமா இன்று (ஜூலை 5) வெளியிட்டார். பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "123 தலைப்புகளில் 481 பரிந்துரைகள் இந்த நிழல் பட்ஜெட்டில் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இதை நிறைவேற்றினால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும்.
அரசின் வழிகாட்டி
ஆட்சியில் இருக்கும் புதிய அரசிற்கு வழிகாட்டியாக இந்த நிழல் நிதி அறிக்கை இருக்கும். தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமான நிலையில் இருக்கிறது. 2020-2021 ஆண்டில் 88 ஆயிரத்து 51 கோடி கடனாக அரசு பெற்றுள்ளது, வரும் ஆண்டில் இது அதிகரிக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், "பாமக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும். தமிழ்நாட்டின் உற்பத்தி திறன் குறைந்திருக்கிறது.
நஷ்டத்தில் மின்துறை
இந்த 2020-21 ஆண்டில் அரசின் சொந்த வரி வருவாய் குறைந்திருக்கிறது. அதேபோல, அரசின் மொத்த வருவாய் 17% வீழ்ச்சியடைந்திருக்கிறது. அரசின் வருவாய் பற்றாக்குறை 3 மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அரசின் கடன் 10 லட்சம் ரூபாய் கோடியாக இருக்கும்.
தமிழ்நாடு மின்துறை நஷ்டத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் மின் நிர்வாகம் சரியாக இல்லை. மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையால், மக்களுக்கு 56 விழுக்காடு பணம் சேமிப்பாகும்.
60 மாவட்டங்கள் உருவாக்கம்
ஒரு மாவட்டத்தின் மக்கள் தொகை 12 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 60 மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டை நான்கு பொருளாதார மண்டலங்களாக பிரித்து, பொருளாதார ஆணையர் பணியமர்த்தப்படுவார். பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும்" என்று பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,,"ஊடகத்தினர் ஆதரவு அளித்தால், நாங்கள் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம்.