தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது பாமக: அன்புமணி ராமதாஸ்!

கடலூர் சிப்காட் ரசாயன கலக்கல் பிரச்னை, ஆறுகளைக் காப்பாற்றுவது, அனல்மின் நிலையங்களை மூட கோரியது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு முதல் முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சிதான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Anbumani
Anbumani

By

Published : Jun 5, 2022, 7:55 PM IST

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 'பசுமை தாயகம்' சார்பில் உருவாக்கப்பட்ட சென்னை தூய காற்றுச் செயல் திட்டத்திற்கான வரைவு நகலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "சுற்றுச்சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. தீவிர போராட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு மிக அச்சுறுத்தலாக இருந்த பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.

கடலூர் சிப்காட் ரசாயன கலக்கல் பிரச்னை, ஆறுகளை காப்பாற்றுவது, அனல்மின் மின் நிலையங்களை மூடக்கோரி போராட்டம் நடத்தியது, குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முதன்முதலில் குரல் கொடுத்தது பாமகதான். ’மது ஒழிப்பு’ போன்ற எங்களது முன்னெடுப்பை பார்த்து, மற்ற கட்சியினரும் தற்போது பேசத் தொடங்கிவிட்டனர்.

சென்னையில் உள்ள காற்று மாசுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளோம். உலகளவில் காற்று மாசினால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் குறிப்பாக சென்னையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 11 ஆயிரம் பேரும், ஒரு நாளுக்கு 20 பேரும் காற்று மாசால் உயிரிழக்கின்றனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலகளில் பசுமை தாயகம் மூலம் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் உள்ள அனைத்து கட்சி கவுன்சிலர்களை முதலில் சந்தித்து, சென்னை தூய காற்று செயல் திட்டத்திற்கான நகலை கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேலும் வீடுகள்தோறும் விழிப்புணர்வு துண்டுச்சீட்டுகள் வழங்கவுள்ளோம். அதுபோல அனைத்துக் கல்லூரி முதல்வர்களை சந்தித்து இந்த செயல்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சென்னையைச் சுற்றி 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த சுங்கச்சாவடிகளும் இருக்கக்கூடாது. மின்சார வாகனங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும், ஏனெனில் அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் மின்சார வாகனங்களே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

ABOUT THE AUTHOR

...view details