இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், 2006ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு, 2008ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீட்டு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், இட ஒதுக்கீட்டின் பயன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் சென்றடையவில்லை. அந்தக் குறையை போக்கவே ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் ஏமாற்றமளிக்கிறது. 2017ஆம் ஆண்டு நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்ட போது 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதிக்குள், அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஆனால், 33 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதுவரை ஆணையத்திற்கு 9 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதைய பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்கு முன்பாவது அறிக்கையை தாக்கல் செய்யுமா? என்பது தெரியவில்லை.