இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமின்றி இத்திட்ட அறிக்கையையும் ரத்து செய்து ஆணையிட்டது. அதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு நிலங்களை கையகப்படுத்த தனி நடைமுறை இருப்பதாகவும், அதனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்றும் வாதிட்டார்.
ஆனால், மத்திய சுற்றுச்சூழல்துறையோ அதையும் தாண்டி, 8 வழிச்சாலைக்கு மட்டுமல்ல, மற்ற திட்டங்களுக்கும் கூட நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அப்போது எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத சுற்றுச்சூழல் அமைச்சகம், இப்போது முற்றிலும் புதிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் - உயர் நீதிமன்றம் யோசனை