இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது.
ஏமாற்றும் முயற்சி
மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின்னுற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.
உண்மை மறைப்பு
குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்களையும், மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின் திட்டத்தையும் ஒப்பிடுவதே தவறாகும். மேகேதாட்டு அணை நீர் மின்னுற்பத்திக்காகவும், பெங்களூரு நகரத்திற்கு 4.75 டி.எம்.சி குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் தான் கட்டப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுவதை கர்நாடகத்தின் கடந்த கால வரலாறையும், இந்த சிக்கலின் முழு பரிமாணத்தையும் அறிந்த எவரும் நம்ப மாட்டார்கள். மத்திய அரசிடம் கர்நாடக அரசு கடந்த 2019&ஆம் ஆண்டு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையில் மேகேதாட்டு திட்டம் ரூ.9,000 கோடியில் செயல்படுத்தப்படும்; 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து விட்டு மேகேதாட்டு குடிநீர் திட்டத்திற்கான அணை என்றால் அதை அப்பாவிகள் கூட நம்ப மாட்டார்கள்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். கர்நாடகத்தில் இப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும். ஏற்கனவே கர்நாடகா அங்குள்ள நீர்நிலைகளை இணைத்து 40 டி.எம்.சி வரை தண்ணீரை கணக்கில் காட்டாமல் சேமித்து வைக்கிறது. மேகேதாட்டு அணையில் 70 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்றால் ஒரே நேரத்தில் 225 டி.எம்.சி நீரை சேமித்து வைக்க இயலும். இப்போதே உபரி நீரை மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அனுப்புகிறது. புதிய அணையும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட வராது. இது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.