இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தேசப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடவேளைகள் வாரத்திற்கு ஆறிலிருந்து நான்காக குறைக்கப்பட்டிருக்கின்றன. உயர் கல்வித் துறை செயலரின் யோசனைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆங்கிலப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும், ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காக தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக தமிழ்ப் பாடவேளைகளை தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலத்திற்காக தினமும் ஒரு பாடவேளையை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் விடுமுறை நாட்களிலும்கூட சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.