தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூடப்படும் ஃபோர்டு... பணியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது - ராமதாஸ் கோரிக்கை

ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதன் மூலம் 38 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆலை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

ராமதாஸ், மூடப்படும் ஃபோர்டு, pmk founder ramadoss about ford company shutdown
pmk founder ramadoss about ford company shutdown

By

Published : Sep 11, 2021, 6:54 AM IST

சென்னை:நாடு முழுவதும் உள்ள ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று (செப். 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டுவரும் ஃபோர்டு கார் ஆலைகளை மூட முடிவுசெய்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது; இது திரும்பப் பெறப்பட வேண்டும்.

ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் புகழ்பெற்ற ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் கார் ஆலைகளை நடத்திவருகிறது.

இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக தற்போது அறிவித்துள்ளது. குஜராத் ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், சென்னை ஆலை அடுத்த ஆண்டிலும் மூடப்படவுள்ளன.

தொழிலாளர்கள் பாதிப்பு

இந்த ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக எட்டாயிரம் பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்கள், இந்தியப் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும்.

இந்த இரு கார் ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும், அவை சாத்தியமற்றவை என்பது உறுதியானதால்தான் கார் ஆலைகளை மூடுவதற்கான முடிவை எடுத்ததாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு பற்றி விவாதிப்பதோ, விமர்சிப்பதோ இந்தத் தருணத்தில் சரியானதாக இருக்காது. ஆனால், இந்த முடிவால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அப்போ 'நோக்கியா'; இப்போ 'ஃபோர்டு'

அதனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இரு ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதை உறுதிசெய்வது உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் தமிழ்நாடு & குஜராத் மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவந்த நோக்கியா நிறுவனத்தின்செல்பேசி உற்பத்தி ஆலையை மூட முடிவெடுத்தபோது, அம்முடிவை மாற்றுவதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்த ஆலையில் பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கடைசி வரை பணியில் இருந்த சுமார் 800 பேருக்கு மட்டும்தான் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

மகாராஷ்டிரா முன்னுதாரணம்

அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்வாதார இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்யவில்லை. அதே போன்ற நிலை ஃபோர்டு கார் ஆலைகளின் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் தாலேகோன் நகரில் அமைத்துள்ள அதன் கார் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளை 2017ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் அறிவித்தது.

ஆனால், அதை ஏற்காத தொழிற்சங்கங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, கார் ஆலையை மூடுவதற்கான அனுமதியை மகாராஷ்டிர அரசு வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பிறகும்கூட, ஆலையை மூட அனுமதிக்கப்படவில்லை. ஃபோர்டு பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழ்நாடு அரசும் அத்தகைய நிலையை எடுக்க வேண்டும்.

உத்திகளில் மாற்றம் வேண்டும்

இந்தியாவில் உள்ள ஃபோர்டு ஆலைகளைத் தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. இந்திய கார் சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது உண்மை. இதற்கான காரணம், ஃபோர்டு கார்களின் விலை அதிகம் என்பதுதான்.

அதே நேரத்தில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதைவிட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது ஃபோர்டு நிறுவனம் அதன் வணிக உத்திகளில் சில மாற்றங்களைச் செய்யும்பட்சத்தில் ஆலையை லாபத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, சென்னை ஃபோர்டு ஆலையைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அரசின் கடமைகள்

ஒருவேளை அது சாத்தியமாகவில்லை என்றால், கார் ஆலை தொழிலாளர்களுக்கு, அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் தமிழ்நாடு அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் கார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், புதிய நிர்வாகத்தில் இப்போதுள்ள பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: எங்கு, எப்படி, எவ்வாறு வாங்கலாம் - அக்டோபர் டெலிவரி

ABOUT THE AUTHOR

...view details