இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற உதவ வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
உலக அளவிலான பாதிப்பு;
புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் நாள் உலக புகையிலை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏதேனும் ஒரு முழக்கத்தை முன்வைத்து, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உலக சுகாதார நிறுவனத்தின் வழக்கமாகும். இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு நாளில், புகையிலைப் பொருள்கள், புகைபிடித்தல் பழக்கத்தை ‘‘கைவிட உறுதியெடுங்கள் (Commit to Quit)’’ என்ற முழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. இது சரியான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகச்சரியான கொள்கை முழக்கம் ஆகும்.
புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 80 லட்சம் பேரும், இந்தியாவில் 12 லட்சம் பேரும் கொல்லப்படுகின்றனர். உலகமெங்கும் 130 கோடிபேர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 10 கோடி பேரையாவது புகையிலைப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதே இந்த ஆண்டுக்கான இலக்காக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கிறது. இன்றைய சூழலில் இந்த இலக்கை எட்டுவது மிகவும் எளிதானதும், மிகவும் முக்கியமானதும் ஆகும்.