சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இவ்வேளையில், தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று (நவ.7) இரவு முதலமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்குப் பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் தொலைப்பேசி உரையாடல் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைப்பேசி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைத்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் மாநில பேரிடர் நிதியானது கரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான தொகையை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு, தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்திடத் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதியளித்தார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாலையில் உள்ள பள்ளங்கள் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்