சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கரோனா வைரஸ் காரணமாக முதல்கட்டமாக 21 நாள்கள் என்று கூறி கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் வருவாய் இழந்து வறுமையில் உள்ளனர். குறிப்பாக, குறைவான வருவாய் பெறுபவர்கள், கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தது.
ஆனால், தென் கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவாமல் தடுத்தது. எனவே, உலக நாடுகள் இந்த வைரஸுக்கு எதிராக இரு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.