சென்னை: நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் தேர்வு நடத்தப்படும் எனவும், இந்தத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே கலந்துகொண்டு தொழில்நுட்பக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை மூலம் செய்ய உள்ள பல்வேறு சீர்திருத்தங்களை விளக்கிக் கூறினார்
மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் தொழில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் விளக்கிப் பேசினார். ஒரே வளாகத்தில் தொழில்நுட்ப படிப்புகள் அனைத்தையும் ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்க கூடிய கல்வி நிறுவனங்களை இணைக்கும்போது 2 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகின்றன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் சகஸ்ரபுதே தேசிய புதிய கல்விக்கொள்கை 12ஆம் வகுப்பில் வேதியியல், கணிதம் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஊக்குவிப்பதாகவும், அந்த வகையில் தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் கூறினார்.
பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருகின்ற போது அவர்கள் முதலாம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்கு அடிப்படையாக விளக்குங்கின்ற கணிதம் இயற்பியல், வேதியியல், ஆகிய பாடங்களை கட்டாயம் படித்து தேர்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே பேட்டி புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் போது திறனறிவுத் தேர்வு நடத்தப்படலாம் எனக் கூறினார். மேலும் அனைத்து வகை உயர்கல்வி படிப்புகளிலும் மாணவர்கள் சேருகின்ற போது அவர்களின் திறனை அறியும் வகையில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான ஒரு திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேசிய தேர்வு முகமை ஏற்கனவே ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதேபோல் தொழில் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்துவதற்கு புதிய கல்விக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் ஒரே நிறுவனத்திடம் இருக்கும். தற்போது பல்வேறு அமைப்புகளிடம் அங்கீகாரம் பெறும் நிலைமை மாறி ஒரு அமைப்பிடம் அனைத்து படிப்புகளுக்கும் அங்கீகாரம் பெற முடியும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்தார்.