தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தள்ளுவண்டி: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு - சென்னை மாநகராட்சி

சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கக்கோரிய மனுவுக்குத் தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 16, 2021, 6:18 PM IST

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் ரூ.47 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டிகள் வழங்கும் சிறப்புத் திட்டமும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகிறது.

தள்ளுவண்டி கடைகள் பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் குலுக்கலும் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கும் 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சியை அணுகியபோது, இதுபோன்று எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனப் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, மாநகராட்சி வழங்கும் தள்ளுவண்டி கடைகளில் ஐ்து விழுக்காட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், மத்திய அரசின் சிறப்புத் திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கும் 900 தள்ளுவண்டி கடைகளில் ஐந்து விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டனர். தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சூரப்பா விசாரணை அறிக்கை வழக்கு: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிபதி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details