இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கையில் அரசு கட்டுப்பாட்டு இடங்களுக்கு, இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இறுதி கட்ட கலந்தாய்வை அரசு நடத்தவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இது திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது.
இதன் காரணமாக, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளான ஆகஸ்ட் 31 அன்று, கல்லூரி நிர்வாகங்களே 100க்கும் மேற்பட்ட இடங்களை நேரடியாக நிரப்பிக் கொண்டன. இதனால் அதிக மதிப்பெண் பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்கள் இருந்தும், அது கிடைக்கவில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றோருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது அப்பட்டமான முறைகேடு. இது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கலந்தாய்வு நடத்தாததை நீதிமன்றம் கண்டித்ததோடு, ஏற்கனவே தனியார் கல்லூரிகள் தாமாகவே நடத்திய மாணவர் சேர்க்கையையும் நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்திடம் மாணவர் சேர்க்கைக்கான காலநீட்டிப்பிற்கு அனுமதி பெற்று, அரசு இறுதிகட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்றும், அதன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது. தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.