தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிர்பயா நிதியை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைக்கக் கோரி மனு - நிர்பயா நிதி

சென்னை: பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்புக்காக மத்திய அரசிடம் பெறப்படும் நிர்பயா நிதியை, முழுமையாக செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

high court
high court

By

Published : Dec 17, 2019, 6:33 PM IST

2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக 'நிர்பயா நிதியம்' என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதியத்திற்கு, ஆரம்பகட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கிவருகிறது.

நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் வெறும் ஆறு கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளதாகவும் மீத தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், தமிழ்நாட்டில் 2019 ஜனவரி முதல் மே மாதம் வரை 151 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 10 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று, 100 விழுக்காடு செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்க தமிழ்நாடு உள் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details