சென்னை: நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனைவிட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
பன்னீர்செல்வம் வெற்றிபெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல்செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன் இன்று (பிப்ரவரி 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் சொத்து, கடன் விவரங்களைத் தெரிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும், அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிட்டார்.