தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெரியார் எப்போதும் (142*) நாட் அவுட்… - தந்தை பெரியார்

ஹிந்தி தெரியாமல் பானிபூரி வாங்க முடியுமா என்று சிலர் இப்போது வாதம் எழுப்புகிறார்கள். ஒரு மொழியால் ஒருவனுக்கு என்ன பயன், அவனுக்கு அந்த மொழி எந்த விதத்தில் உதவும் என்பதை பகுத்தறிவோடு முன்வைக்காதவர்களை காணும்போதுதான் பெரியார் ஏன் இன்றும் அவசியப்படுகிறார் என்பது புரியும்.

periyar
periyar

By

Published : Sep 17, 2020, 1:06 PM IST

மனித குலம் ஆதிக்கத்திற்கு கீழ் அடைபடும்போதெல்லாம் அதை விடுதலை செய்வதற்கு யாரேனும் ஒருவர் தோன்றுவார். அப்படி தோன்றியவர் வருடங்கள் கடந்தும், தான் இறந்தே போனாலும் அந்தச் சமூகத்திற்கு தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் பெரியார்.

பெரியார், இந்தப் பெயரை கேட்டாலே ஆதிக்கவர்க்கத்தினரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. ஏன்? ஏனென்றால் அவர்கள் கனவிலும் நினைத்திராத செயல்களை அவர் செய்திருக்கிறார். சிந்தனைகளை விதைத்திருக்கிறார். அவர் இருந்தபோது சரி, அவர் இறந்த பிறகும் அவருக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்துகொண்டே இருக்கிறது.


’ஒற்றை தேசம்’ என்ற பதம் கொண்டு இந்த நிலத்தை பல துண்டுகளாக்கும் வேலை சமீபகாலமாக அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. அந்த அரங்கேற்ற வேலையை பல மாநிலங்கள் காத்திரமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. அதில் முதன்மையானது தமிழ்நாடு. அந்த விதையை விதைத்தது பெரியார்.

அறிவியலையும், முற்போக்கையும் கற்றுக்கொடுக்காத எந்த மொழியும் தேவையில்லாதது என்ற நிலையிலிருந்துதான் பெரியார் ஒரு மொழியை அணுகினார். அவர் எந்த மொழியையும் புனிதப்படுத்தவில்லை.


ஏன் தமிழையும் அவர் புனிதப்படுத்தவில்லை, ”இரண்டாயிரம் வருடங்களாக இருக்கும் மூட பழக்கவழக்கங்களிலிருந்து எப்படி வந்தோமோ அதில்தான் இன்றும் இருக்கிறோம். அதிலிருந்து மாறாமல் நாம், இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னர் இருப்பதையே உதாரணம் காட்டி பின்பற்றிவந்தால் அதற்கு என்ன பொருள். தமிழ் காட்டுமிராண்டிகள் கையாளும் மொழி. காலத்திற்கேற்ற வண்ணம் தமிழை சீர்ப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றார்.


ஆம், கண்ணை மூடிக்கொண்டு அவர் தமிழை ஆதரிக்கவில்லை. தமிழில் இருக்கும் சில பிற்போக்குத்தனமான கருத்துக்களையும் அவர் எதிர்த்தார். தற்போது இருக்கும் மற்ற மொழிகளைக் காட்டிலும் சிறந்தது தமிழ்தான் அதனால் அதனை ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

ஆனால், ஹிந்தி தெரியாமல் பானிபூரி வாங்க முடியுமா என்று சிலர் இப்போது வாதம் எழுப்புகிறார்கள். ஒரு மொழியால் ஒருவனுக்கு என்ன பயன், அவனுக்கு அந்த மொழி எந்த விதத்தில் உதவும் என்பதை பகுத்தறிவோடு முன்வைக்காதவர்களை காணும்போதுதான் பெரியார் ஏன் இன்றும் அவசியப்படுகிறார் என்பது புரியும்.


”கல்வி கற்பதன் அவசியமே ஒருவன் சுதந்திரமாக வாழ்வதற்கு தகுதிப்படுத்திக்கொள்வது” என்றார் பெரியார். ஒருவன் முற்போக்குத்தன்மையோடும், சுதந்திரமாகவும் இந்த சமூகத்திற்குள் நுழைவதற்கு கல்வி பிரதானம். ஆனால், ஒருவன் இந்தச் சமூகத்திற்குள் அப்படி நுழைவதற்கு அந்தக் கல்வியை வைத்தே லாவகமாக தடை போடுகிறார்கள் என்பதை இந்த நாடு அறியும்.

தலைவன் எனப்படுபவன் காலங்கடந்து நிற்பதைவிடவும், அவனின் சித்தாந்தங்கள் காலங்கடந்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவன் இந்த மனித குலத்திற்கு உருப்படியான விஷயங்கள் செய்திருக்கிறான் என்று பொருள். தற்போது முன்னெடுக்கப்படும் அத்தனை அறமற்ற விஷயங்களையும் எதிர்ப்பதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் தேவைப்படுகின்றன.


உங்கள் மனைவியை வேறு யாருடனாவது அனுப்புவீர்களா என்ற கேள்விக்கு எந்தவித மன பதற்றமுமின்றி, அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் வேறு யாருடனும் செல்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அவளிடம் இருக்கிறது என்றவர். பெரியாரை பேசுவது மிக மிக எளிது. ஆனால், அவரைப் போல் ஒருநாள்கூட யாராலும் வாழ்ந்துவிட முடியாது.

எதிர்காலத்தில் அனைவரது சட்டைப்பையிலும் கம்பி இல்லா தந்தி சாதனம் இருக்கும் என்றவரை இன்றைய ஸ்மார்ட் ஃபோன் இளைஞர்களும் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவரின் சித்தாந்தங்களை, சிந்தனைகளை பரவவிடாமல் அடக்கிவிட வேண்டும் என்று சிலர் துடித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்தான் அவர் பல மாநிலத்தவர்களால் உணரப்படுகிறார் அவர்களுக்கு அவசியப்படுகிறார்.


பெரியாரின் கைத்தடி கேள்விக்குறி வடிவத்திலானது. ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்க அந்த கைத்தடிதான் கற்றுக்கொடுத்தது. அந்த கைத்தடிதான் அடிமைப்பட்ட, பிற்போக்குத்தனங்களில் சிக்கியிருந்த சமூகத்தை வெளிக்கொண்டுவர துடித்தது.

”இன்னும் 50 ஆண்டுகளுக்குத்தான் எனது தேவை இருக்கும். எதிர்காலத்தில் சாதி, மதம், கடவுள் இருக்காது. அப்போது இவைகளையெல்லாம் ஈ.வெ. ராமசாமி எதிர்த்தார் என்பதே கேலிப்பொருளாக இருக்கும்” என்று எதிர்கால சமூகம் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து சொன்னவர் பெரியார்.

ஆனால், அவர் இருந்த காலத்தில் எப்படி பிற்போக்குத்தனங்கள் பின்னப்பட்டனவோ அதேபோல் தற்காலத்திலும் பிற்போக்குத்தனங்களும், அடிப்படைவாதங்களும் பலமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமூகத்திலிருந்து அந்தப் பின்னல்கள் எடுக்கப்படும்வரை அவர் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார். பெரியார் எப்போதும் (142*) நாட் அவுட்….

ABOUT THE AUTHOR

...view details