தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் பாதை இனி புதிய பாதையில்... சகாயத்திற்கு பின்னடைவா ? - மக்கள் பாதை

ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பாதை இயக்கத்தின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., அவ்வியக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

People's Path is now on a new path ...  is it Regression to IAS Sagayam
மக்கள் பாதை இனி புதிய பாதையில்... சகாயத்திற்கு பின்னடைவா ?

By

Published : Jan 14, 2021, 5:31 PM IST

ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பாதை இயக்கத்தின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்த விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., அவ்வியக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர். அரசுப் பணியில் இருந்து அவர் கோரிய விருப்ப ஓய்வில் விடுவிக்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே மக்கள் பாதை பிளவுபட்டுள்ளது. எதிர் தரப்பினரின் இந்த முடிவு சகாயத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பணி ஓய்விற்குப் பின்னர் அரசியல் களத்தில் கால் பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது வழிகாட்டலில் செயல்பட்டுவந்த மக்கள் பாதை இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு, ஊழல் எதிர்ப்பின் முகமாக கருதப்பட்டு வந்த அவருடைய செல்வாக்கின் சரிவாக பார்க்கப்படுகிறது.

ஊழல் ஒழிப்பை பிரதான முழக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழிகாட்டிப் பொறுப்பில் இருந்த சகாயம் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், அவரது தலைமைப் பண்பின் மீதும் விமர்சனங்கள் இயல்பாகவே எழுந்துள்ளன.

இயக்கப் பொறுப்பாளர்கள் நியமன படிவத்தில் சாதி என்ற பிரிவு இணைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அதனை நீக்க வலியுறுத்தியும், அது குறித்து மின்னஞ்சல் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்காத காரணத்தினால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினருமான நாகல்சாமி ஐ.ஏ.ஏ.எஸ்., விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஊழல் ஒழிப்பை பிரதான முழக்கமாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட மக்கள் பாதை இயக்கம், ஒற்றைக் கருத்து உடையவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குவகித்த மக்கள் பாதை இயக்கத்தவர்களை விசாரிக்க இயக்கத்திற்குள்ளேயே விசாரணைக் குழு ஒன்றை சகாயம் ஐ.ஏ.எஸ்., நியமித்திருந்தார். இதேபோல, கடந்தாண்டு நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் பாதை தலைமையகத்தில் நடைபெற்றுவந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தியதோடு, அதை கண்டித்து கடிதம் எழுதி இருந்தார்.

மக்கள் உரிமை மற்றும் மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தாமல் சட்டப்படியான தீர்வை அணுக வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது. இயக்கத்தில் இருவேறு கருத்துகள் நிலவியதும் நீக்கத்திற்கான காரணமாக தெரிய வருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய நாகல்சாமி, “கடந்த 2 ஆண்டுகளாகவே அவரின் செயல்பாடுகள் சரியில்லை. அமைப்பில் சாதிய ரீதியாக செயல்படுகிறார். சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு இயக்கத்தில் இணைந்த இளைஞர்களை தவறான வழியில் நடத்துகிறார். லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே நேர்மைக்கான அடையாளம் கிடையாது. இயக்கத்தை அவரது தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்” என தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து சகாயம் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அழுத்தம் காரணமாகவே நாகல்சாமி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றிவிட்டோம். தற்போதைய நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் உடையது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பாதை இனி புதிய பாதையில்... சகாயத்திற்கு பின்னடைவா ?
இது குறித்து கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் லட்சுமணன், “ஊழல் ஒழிப்பு இயக்கமாக இருந்தால் எடுபடாது. தேர்தல் அரசியலில் ஈடுபட்டால்தான் மக்களின் நிலைப்பாடு தெரியவரும். களத்தில் இறங்கி மக்களிடம் பேசினால்தான் மக்கள் அங்கீகரிப்பார்கள். வரும் காலங்களில் அவரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார். மக்கள் பாதை இயக்கத்திற்கு இரண்டு தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர். நாகல்சாமி பிரிவினர், மக்கள் பாதை இயக்கத்திற்கு செயலாளர், பொருளாளர் பதவிகளில் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதே நேரத்தில், சகாயம் தரப்பினர் நாகல்சாமியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இரு பிரிவினரின் போக்கினைப் பொறுத்தே அமைப்பின் எதிர்காலம் இருக்கும். ஆனால், மக்கள் அரசியலுக்கு ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றைப்புள்ளி மட்டுமே அச்சாரம் ஆகாது என்று தெளிவாகத் தெரிகிறது.

இதையும் படிங்க :சகாயம் வந்தால் சகாயம் செய்யுமா அரசியல்?

ABOUT THE AUTHOR

...view details