தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டை உலுக்கும் மின்வெட்டு - காலம் திரும்புகிறதா? - நிலக்கரி தட்டுப்பாடு காரணமா

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின்வெட்டு
மின்வெட்டு

By

Published : Apr 24, 2022, 3:49 PM IST

சென்னை: சென்னையைத் தவிர, தமிழ்நாட்டின் பல பகுதிகளில், கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆன நிலையில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அதற்குக் காரணம், கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகமாக இருந்ததுவே ஆகும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக தோற்றதற்கு மின்வெட்டு ஒரு முக்கிய காரணமாக பேசப்பட்டது.

இந்த நிலை இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கோடை காலம் என்பதால் மின்வெட்டைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவையில் மின்வெட்டு பிரச்னையை கிளப்பி வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது 16 ஆயிரத்து 500 மெகாவாட் முதல் 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் வரை தேவைப்படுகிறது. ஆனால், மாநிலத்தின் மின் உற்பத்தி 12 ஆயிரத்து 800 மெகாவாட்டில் இருந்து, 13 ஆயிரத்து 100 மெகாவாட்டாக உள்ளது. கோடை காலம் என்பதால் முன்கூட்டியே தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்திருக்க வேண்டும். நிர்வாகம் சரியில்லாத அரசின் தவறான முடிவுகள்தான் மின்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ளது" எனக் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், "தமிழ்நாட்டில் செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து, ஊழல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.

மின்வெட்டு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "மத்திய தொகுப்பிலிருந்து வர வேண்டிய 796 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வழங்கியது. 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் விரைவில் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் தலா 210 மெகா வாட் வீதம், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 50 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம். மாதத்திற்கு சுமார் 30 ஆயிரம் மெகா வாட் தயாரிக்கலாம் என்ற நிலை இருக்கும்போது, 17 ஆயிரத்து 100 மெகா வாட் மின்சாரத்தை பூர்த்தி செய்ய முடியாதது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு நாளைக்கு ஆயிரத்து 50 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க 35 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி அனல் மின்நிலயங்களில் மட்டும் இவ்வளவு மின் உற்பத்தி செய்ய முடியும் என்றால், மீதமுள்ள மேட்டூர், எண்ணூர், நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் எங்கே செல்கின்றது என கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஓய்வு பெற்ற மின்சாரத்துறை அலுவலர் காந்தி திருமுருகன் கூறுகையில், "நான் இதை மாநில பிரச்னையாக பார்க்கவில்லை. இந்தியா முழுவதும் உள்ள உத்தரப்பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்குக்காரணம் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிலக்கரி போதிய அளவில் கிடைப்பதில்லை. ரயில்களில் ரேக் குறைவாக இப்பதால் நிலக்கரி அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளது. இதை வாங்க வேண்டும் என்றால் அதிக நிதி தேவைப்படுகிறது. மேலும் கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தைப் பயன்படுத்தி தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தின் விலையை உயர்த்தியுள்ளது. இப்படியே போய்கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள்தான் பாதிப்படைய போகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசாணை!

ABOUT THE AUTHOR

...view details