கரோனாவின் கோரப் பிடியில் இருந்து தலைநகர் சென்னை தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த மாதங்களில் ஏற்பட்ட தொடர் கரோனா உயிரிழப்புகளால் உறைந்து போயிருந்தவர்களுக்கு, சென்ற மாதம் மூன்று வயது குழந்தை ஒன்று டெங்குவிற்கு பலியாகியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதோடு கடந்த காலங்களில் ஏராளமானோர் டெங்குவுக்கு பலியானதையும் நினைத்து கடும் அச்சத்தில் இருக்கின்றனர் சென்னை மக்கள். மழை பெய்ய தொடங்கி உள்ளதால், மாநகரின் பல இடங்களில் கொசுக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, கொசுவோடு இணைந்த வாழ்வு கொண்ட கூவக்கரையோர எளிய மக்கள், ஆகாய தாமரை படர்வதாலேயே கொசுக்கள் அதிகளவில் உருவாவதாகவும், சாலைகளில் தேங்கும் மழை நீராலும் கொசுக்கள் வருவதாக கூறுகின்றனர்.
மழைக்காலங்களில் மழை நீரோடு கசடுகள் அடித்து வருவதால், அவை தேங்கி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுவதால் கொசு மட்டுமின்றி பாம்பு உள்ளிட்டவையும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கொசு மருந்து தெளிப்பதாக வெறும் கணக்குக்காக வந்து கையெழுத்து வாங்கிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள், எதையுமே செய்வதில்லை என்றும் கோபத்துடன் கூறுகின்றனர்.