வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
இதன் காரணமாக ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநின்றவூர் பேரூராட்சி பெரியார் நகர்ப் பகுதியில் சுமார் 6 அடி அளவிற்கு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்து மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
ஒற்றைக் கோரிக்கை
சிலர் தங்களது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தனர். மழை நின்று ஒரு வாரம் கடந்த நிலையில் தற்போதுவரை இடுப்பளவு நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பெருமளவு அவதிப்பட்டுவரும் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி நேற்று (டிசம்பர் 7) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி வட்டாட்சியர், திருநின்றவூர் காவல் துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் இவர்களது பேச்சுவார்த்தைக்குப் பொதுமக்கள் இணங்கவில்லை.