தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

சென்னை: தற்போது தமிழ்நாட்டு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல என்றும் மகிழ்ச்சியாக இருக்க, வருமானத்தைப் பற்றி எண்ணாமல் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

corona
corona

By

Published : Apr 21, 2020, 8:19 PM IST

Updated : Apr 22, 2020, 1:44 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, திரையரங்கங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், மதுபானக் கடைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விமானம், தொடர்வண்டி, பேருந்து போக்குவரத்துகளும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கிறது.

தற்போது மதுபானக் கடைகளும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடியே உள்ளன. இதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். மதுபானக் கடைகள் திறந்திருந்த காலங்களில், குடிப்பழக்கத்தினால் பலரும் தங்கள் குடும்பத்தை மறந்து, அவர்களின் தேவையை மறந்து, குடும்பத்தை பெரும் இன்னலுக்கு ஆளாக்கினர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 500 அரசு மதுபானக் கடைகளை மூடி உத்தரவிட்டார். மேலும், படிப்படியாக மூடப்படுமென்ற அவர், பின்னர் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை எனக் குறைத்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், மதுபானக் கடைகள் குறைப்பு குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஆனால், ’கெட்டதிலும் ஒரு நல்லது’ என வட்டார வழக்கில் ஒரு சொலவடை இருக்கிறது. அதுபோல, கரோனா ஊரடங்கால், தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. குடிநோயர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக குடிக்கு மாற்று வழி தேடி உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தாலும், பெரும்பாலானவர்கள் குடியை மறந்து குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

மதுபானக் கடைகளை இந்த சூழலிலேயே நிரந்தரமாக மூடிவிட வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குறிப்பாக பெண்களும் கோரி வருகின்றனர். எனவே, இப்போது மதுபானக் கடைகளை மூடவில்லை என்றால் இனி எப்போதுமே தமிழகத்தில் அது முடியாது. தற்போது தமிழ்நாட்டு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல என்றும் மகிழ்ச்சியாக இருக்க, வருமானத்தைப் பற்றி எண்ணாமல் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

சரியான சூழலில் மதுக்கடைகள் மூடல் நிகழ்ந்துள்ளது. இதனை அப்படியே தக்க வைத்துக் கொள்வது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் சிகிச்சையில் இருக்கும் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் ஸ்டாலின், உதயநிதி நலம் விசாரிப்பு!

Last Updated : Apr 22, 2020, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details