தமிழ்நாட்டில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த சோ ஜே வான் மற்றும் சோய் யாங்க் சுக் ஆகியோர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ஏய்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. ஆனால், தங்களை சிறையில் இருந்து விடுவிக்காமல், ஊரடங்கு காரணமாக திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்துவிட்டதாகவும், அந்த முகாமில் 80 பேர் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தங்க அனுமதி வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், போதுமான இடவசதி உள்ளதாகவும், கரோனா தொற்று யாருக்கும் இல்லை என முகாம் பொறுப்பாளரான சிறப்பு துணை ஆட்சியர், முகாம் முழுவதையும் காணொலி காட்சி மூலமாக காண்பித்தார். இதை பார்வையிட்ட நீதிபதி, மனுதாரர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு தங்க அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என கூறி இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.