தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு நேரத்தில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி! - கந்து வட்டி

சென்னை: ஊரடங்கால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஏழை, எளிய மக்கள் பலர் தங்களின் அன்றாட தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாததால் கந்து வட்டிக்கு பணம் பெறும் அவலம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

interest
interest

By

Published : May 12, 2020, 11:18 PM IST

ஊரடங்கால் மக்கள் அனைவரும் வேலைக்குக் கூட செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடந்த 48 நாள்களாக சேமிப்புகள் அனைத்தும் செலவழிந்து கடும் பண நெருக்கடியில் தவித்து வரும் அவர்களுக்கு, அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணமும் ஒரு வார மளிகைப் பொருள்களுக்கே தீர்ந்து போய்விட்டது. வாங்கிய கடன்களை எண்ணி தூக்கமிழந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய பிறகும் வட்டித்தொகையை கேட்டு துன்புறுத்தும் பல வங்கிகளால் மன இறுக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் பணப் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக நாடுவது அடகுக் கடைகள்தான். ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான குறைந்த தொகைகளை அடகுக் கடையில் மட்டுமே பெற முடியும். இந்நிலையில், ஊரடங்கில் இயங்க தளர்வுகளுடன் சிலக் கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கடைகளில் முக்கியமானது அடகுக் கடை. இதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக சென்னையில் பல்வேறு அடகுக் கடைகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் மக்கள் பலர் இதனை அறிந்ததும் நகைகளை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்கு படையெடுத்தனர். இதனால், அடகுக் கடைகளில் கூட்டம் அலைமோதின. இதனைக் கண்ட காவல்துறையினர் பெரும்பாலான இடங்களில் அடகுக் கடைகளை திறக்க அனுமதி மறுத்துள்ளனர்.

சூழ்நிலையை பயன்படுத்தி 15 சதவிகிதத்திற்கும் மேலாக கந்து வட்டி வசூல்

இதையடுத்து பலருக்கு அன்றாட செலவுகள், வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால், செய்வதறியாது வட்டிக்கு பணம் வாங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வட்டிக்கு பணம் தருபவர்களும் 15 சதவிகிதத்திற்கும் மேலாக கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள பலரும் வேறு வழியின்றி, அவர்கள் கேட்கும் வட்டிக்கு பணம் பெற்று வருகின்றனர்.

கரோனாவைவிடக் கொடிய உயிர்கொல்லி கந்துவட்டி

ஏற்கனவே ஏழை, எளியோர் பலர் கந்து வட்டிக்கு பணம் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்த முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளை பார்த்ததுதான் தமிழ்நாடு. இந்த சூழலில், தற்போது ஊரடங்கு காரணமாக மீண்டும் தலைதூக்கியுள்ள கந்துவட்டியால் எந்த வேண்டாத நிகழ்வுகளும் நடந்திடாத வகையில், அரசு மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய வண்ணம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு கூறியது போல 'இரட்டிப்பு சம்பளம்' வழங்க வேண்டும் - ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details