சென்னை: மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.
இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து, பிரிக்க முயன்றதால், இருவரும் மதுரையிலிருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.
இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு உள் துறை அமைச்சகம் புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள் நடைமுறை விதிகளில் 24 c சட்டப்பிரிவைச் சேர்த்துள்ளது.
அதன்படி உதவி ஆணையர், உதவி ஆணையருக்கு கீழ் பணிபுரியும் காவல் துறையினர் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என LGBTQIA பிரிவைச் சேர்ந்தவர்களைத் தேவையில்லாமல் காவல் துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என்ற பிரிவைச் சேர்த்துள்ளனர்.