சென்னையில் நேற்று முதல் விடாத தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில், அடையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அங்குள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே வசித்து வருவதாக கூறுகின்றனர். தங்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறைகளிடம் இருந்து இதுவரை ஒரு தகவலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம், வர்தா புயலின் போதே கடுமையான பாதிப்புகளைச் சந்தித்ததாக கூறும் அம்மக்கள், கரோனா பாதிப்புக்கு மத்தியில் மீண்டும் இதுபோன்ற ஒரு பாதிப்பை மீண்டும் சந்தித்தால் தங்கள் வாழ்வாதாரமே பறிபோகும் என்று கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து சைதாப்பேட்டை சின்னமலை அருகேயுள்ள ஆற்றங்கரைப் பகுதிவாசியான லட்சுமி பேசுகையில், வயதான காலத்தில் நிவர் போன்ற புயல் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியவில்லை என்றார். உணவின்றி தவிக்கும் தங்களுக்கு வீடுகளுக்குள் நீர் புகுந்தால் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்றும், இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் லட்சுமி தெரிவித்தார்.