சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம், சிவசக்தி நகரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 80 ஏக்கர் 73 சென்ட் நிலம் உள்ளது. அவற்றை ஆக்கிரமித்து ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். அதற்காக குடியிருப்பு வாசிகள் முறையாக வரி மற்றும் வாடகை செலுத்தாத நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு, மீண்டும் அதனை கோயில் இடமாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் முதல் கட்டமாக நீதிமன்றம் 54 வீடுகளை உடனடியாக காலி செய்யச் சொல்லியும், அந்த இடத்தை மீட்டு மீண்டும் இந்து அறநிலையத்துறைக்கே வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று காலை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமிகாந்தன், பாரதிதாசன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் சார்பில் சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்க வருகை தந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து, அதிகாரிகளை தங்களது பகுதிக்குள் விடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லாவரம், சங்கர் நகர், குரோம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் நீதிமன்ற உத்தரவை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் பொதுமக்கள் அதிகாரிகளை வீடுகளுக்கு சீல் வைக்க அனுமதிக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனக்குத்தானே மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க:கரூர் வருகை தரும் முதலமைச்சரைக் கண்டித்து பாஜக கறுப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!