சென்னை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று டிச.11 ஆம் தேதி தேசிய லோக் அதாலத் என்று அழைக்கப்படும் "மக்கள் நீதிமன்றங்கள்" நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் நீதிமன்றங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு அமர்வுகளும் வழக்குகளைத் தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதேபோல, மாவட்ட மற்றும் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம், மாநிலம் முழுவதும் 417 அமர்வுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
இதில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 49 ஆயிரத்து 586 வழக்குகள், நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 8 ஆயிரத்து 137 வழக்குகள் என்று மொத்தம் 57,723 வழக்குகளுக்கு, ரூ.388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 செலவின மதிப்பிலான தீர்வு காணப்பட்டதாகத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.