சென்னை: கரோனா வைரஸ் தொற்று குறைந்தபோது பாதுகாப்பு வழிமுறைகளில் சில தலைவர்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் முகக்கவசம் பொதுக்கூட்டங்களில் அணிய வேண்டும் என்பதை தற்போது வரை நீக்கவில்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் அரசு வழிகாட்டுதல்களை தவறாக புரிந்து கொண்டு பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வலம் வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து உள்ளது. மேலும் தொற்றானது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து பரவி வருகிறது. மாவட்டங்களிலும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாகி யாரும் இறக்கும் நிலைக்குச் செல்லவில்லை.
ஆனால் அதே நேரத்தில் பரவல் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீண்டும் பொதுமக்களிடம் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கொண்டுவர மருத்துவத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.
இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939இன் படி அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க:இது தந்தைப் பெரியாரின் திராவிட பூமி..! - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ