தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆவணங்கள் காணவில்லை: நில நிர்வாக ஆணையருக்கு கிடுக்கிப்பிடி

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் காணாமல்போனது குறித்து விசாரித்து நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல்செய்ய நில நிர்வாகத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Sep 22, 2021, 1:12 PM IST

சென்னை:ஜமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் நிறுவனத்திற்குச் சொந்தமான 1.79 ஏக்கர் நிலத்தை, குவெண்டி தாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, 2019ஆம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரது அமர்வு, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள், இந்நாள் வருவாய் கோட்டாட்சியர்களை முன்னிலையாகும்படி உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் நறுக் கேள்வி

அதன்படி முன்னிலையான வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், உண்மை ஆவணங்களைத் தேடியும் அவை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராஜகுமாரிடம் விசாரித்தபோது, தான் பட்டா மாற்றம் செய்தபோது ஆவணங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஆவணங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் நில நிர்வாகத் துறை ஆணையர் அறிக்கைத் தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், வருவாய் கோட்டாட்சியர் எப்படி பட்டா மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறித்தும், தவறிழைத்த அலுவலர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்தும் அறிக்கையளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கு

ABOUT THE AUTHOR

...view details