சென்னை:சவுதி அரேபியா நாட்டில் உள்ள மதினா நகரிலிருந்து, சவுதி ஏர்லைன்ஸ் போயிங் ரக விமானம் 272 பயணிகளுடன், மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த விமானம் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் போது, அந்த விமானத்தில் பயணித்த மலேசியா நாட்டை சேர்ந்த அட்நம் பின் மாமத்(55) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவருடைய மனைவி நபீஷம் பிந்த் கதறி அழுதார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக விமானம் சென்னையில், அவசரமாக தரையிறங்க வேண்டும் என்று அனுமதி கேட்டார்.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்கும்படியும், அதோடு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யும்படியும் கூறினர்.
இதனையடுத்து சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இன்று பகல் 12 மணியளவில், சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்த பயணியை பரிசோதித்தனர்.