சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசி, கோழைத்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவம் நடைபெற்றவுடன் மிக விரைவாக செயல்பட்ட காவல்துறை, முதல் தகவல் அறிக்கையை பதிவு முன்னரே, தடயவியல் நிபுணர்களைக் கூட அழைக்காமல், அவசர அவசரமாக குற்ற நிகழ்வு இடத்தை தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிவேக நடவடிக்கை எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக ஆதாரங்களை எல்லாம் அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது. குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள் என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்யவாய்ப்பில்லை. இதற்குப்பின் உள்ள மிகப் பெரிய சதியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
ஆகவேதான் இதனை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கவேண்டும் எனக் கோருகிறோம். நேற்று ஒரே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிமனைகள் மாநிலம் முழுவதும் குறிவைத்து தாக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இளைஞர் அணியின் துணைத் தலைவர் புவனேஸ்வரன் கார் எரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை திருவிக நகர் 75ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரேணுகா சகாதேவன் பணிமனையும், திருப்பூர் 44ஆவது வார்டு வேட்பாளர் பாஜக சிவகுமார் பணிமனையும், வேலூர் நகராட்சி 52ஆவது வார்டு வேட்பாளர் கார்த்திகேயன் தேர்தல் பணிமனையும் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே இரவில் நடைபெறும் ஒரே மாதிரியான தாக்குதல்கள் இதன் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
திமுக ஆட்சியில் மக்களைவிட சமூக விரோதிகள் நலமாக இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கும் தமிழ்நாட்டில் கண்மூடிப்போனது. காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு விட்டது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய எழுச்சியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற உள்ளது பலரின் கண்களை உறுத்துகிறது.