தமிழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் 16 அன்று வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 86 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 80 இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் பொதுக்கலந்தாய்வில் 1,061 எம்.பி.பி.எஸ் இடங்களும், 985 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கையேட்டிலேயே கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்படும். அதன் அடிப்படையிலேயே பெற்றோர் தங்களின் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தயார் ஆவார்கள். இந்நிலையில், சுயநிதி தொழிற்கல்விக்கான கட்டண நிர்ணயக்குழுவின் தலைவரான ஒய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன், மருத்துவப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்து அக்டோபர் 12 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.