சேலம் மாவட்டத்தில், கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிக்குமார். இவர் மீது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவர் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே , வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிக்குமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக்கோரி, சசிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ' தன்னை துன்புறுத்தியதாகவும், கைவிட்டுச் சென்று விவாகரத்து பெற்றதாகவும், விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தும், 15 நாள்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.