சென்னை: இரண்டு ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாகச் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேகர்பாபுவை புகழ்ந்த மாஃபா பாண்டியராஜன்
விழாவில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "இரண்டு ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாகச் செயல்படுகிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது. பாரதியாரின் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார்.
மேலும், தவறு செய்வது தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப் பணிகளில் ஈட்டுப்பட்ட தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு இடங்களில் பாராட்டு கிடைத்தது. காவல்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு இதுவே சான்று. பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது போல் காவல்துறை ஏவல் துறையாக செயல்படவில்லை.
பாராட்டாவிட்டாலும் வசை பாடாமல் இருக்கலாம்
மழை, புயல், வெள்ளத்திற்கு பிறகும் 34 நாட்களாக முதலமைச்சர் களத்தில் உள்ளார். அண்டை மாநில பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் செயல்படுவது தமிழகத்திற்குப் பெருமை என்றும் நீதியரசர் புகழேந்தி கூறியது போல் பாராட்டாவிட்டாலும் வசை பாடாமல் இருக்கலாம்" எனக் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாண்டியராஜன் குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவாரா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "அனைத்து தரப்பினரும் முதலமைச்சரை பின்பற்று மளவிற்கு அவரது செயல்பாடு உள்ளது. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் திமுகவில் இணைந்து செயல்படலாம். அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகாகவி பாரதிக்கு வானுயர சிலை வேண்டும் - பாரதி புகழ் பாடும் தமிழிசை