லஞ்சப்புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகத்தில், கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர மற்றும் வெள்ளிப்பொருட்கள் சிக்கின. மேலும், ஒரு கோடியே 37 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்த 75 லட்ச ரூபாய் பணமும் முடக்கப்பட்டது.
இதனிடையே, பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை கண்டுபிடிக்க பத்திரப்பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். ஏற்கனவே சோதனையின் போது வீட்டில் இருந்து 18 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், வேறேதும் சொத்துகள் உள்ளதா எனக் கேட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் அதிக சொத்துகள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பத்திரப்பதிவுத்துறையிடம் இருந்து பெறப்பட்ட 50 சதவீதம் ஆவணங்களை கணக்கீடு செய்தபோது, பாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. அது தொடர்பான முழுமையான கணக்கிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாண்டியனின் வருமானம், அவர் வாங்கிக் குவித்த சொத்துகள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டிவருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் குவிக்கப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பாக, வருமானவரித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர். கணக்கீடு பணிக்கு பிறகு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. பாண்டியன் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது!