இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு அறிவித்திருக்கும் தேசியக் கல்வி கொள்கையில் கூறப்பட்டிருக்கும் மும்மொழித் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்காது. இருமொழித் திட்டத்தையே தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
அத்துடன் அவர் ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டுமே தொடரவேண்டும். அனைத்து மட்டங்களிலும் தமிழ் வழிக் கல்வியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருமொழித் திட்டம் பின்பற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மத்திய அரசு பள்ளிகள் ஆகியவற்றில் மும்மொழித் திட்டமே பின்பற்றப்படுகிறது. மேற்கண்ட பள்ளிகள் அனைத்திலும் இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படுகிறது.
அதனைத் தடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டம் மட்டுமே பின்பற்றப்பட உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்.
ஏற்கெனவே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மும்மொழித் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தென்னாட்டு மொழிகளில் ஒன்றினை கற்கவேண்டும் என்றும், தென்னாட்டு மாணவர்கள் மூன்றாவது மொழியாக வடஇந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றினை கற்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதுவரை இந்தி பேசும் மாநிலங்களில் தென்னாட்டு மொழிகளைக் கற்பிக்க எத்தகைய ஏற்பாடும் செய்யப்படவில்லை. அங்கெல்லாம் இருமொழித் திட்டம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே நடைமுறையில் தோல்வியடைந்த மும்மொழித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்