தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து பிரதமரின் கருத்து' - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாடு

’நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து அவர்களுடைய கருத்து அல்ல, அது பிரதமரின் கருத்து. அவர்கள் வெறும் நாய்க்குட்டி தான், அவர்களுக்கு மாஸ்டர் பிரதமர் மோடி. அவருடைய கருத்தை தான் அவர்கள் பேசி இருக்கின்றார்கள்’ என முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து பிரதமரின் கருத்து -  ப.சிதம்பரம் குற்றம்சாட்டு
நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து பிரதமரின் கருத்து - ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

By

Published : Jun 8, 2022, 3:35 PM IST

சென்னை:காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க மே மாதம் 13 ஆம் தேதி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற 'சிந்தனை அமர்வு' மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை சோனியா மேற்கொண்டார். அதன் படி, உதய்பூரில் நடைபெற்ற 'சிந்தனை அமர்வு' கொள்கை பிரகடனம் குறித்த பயிற்சி முகாம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில் 'உதய்பூர் சிந்தனை அமர்வு' மாநாடு கொள்கை விளக்க பயிற்சி முகாம் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உதய்பூர் காங்கிரஸ் கொள்கை பிரகடனம் பயிற்சி முகாம், மகாபலிபுரம்

இந்த சிந்தனை அமர்வு மாநாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் அரசியல் மற்றும் கட்சி அமைப்பு, பொருளாதாரம், விவசாயம், சமூக நீதி இளைஞர் நலன் பெண்கள் நலன் என நான்கு குழுக்களாக விவாத அமர்வுகள் நடத்தப்பட்டது. இதில், பலர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். நான்கு அரங்கத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அனைத்து குழுக்களுக்கும் சென்று தனது ஆலோசனைகளையும் அவ்வப்பொழுது வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாடு

மாநாட்டில் இறுதியாக உரை நிகழ்த்திய முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், "இந்த மாநாட்டின் மூலம் நல்ல கருத்து பரிமாற்றம் நடைபெற்று உள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றது. நீங்கள் அறிந்திருக்கக் கூடிய கருத்துக்கள் வரும் நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளிவர உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் புரிதலோடும் தைரியத்தோடும் எழுதவும் பேசவும் வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மிகவும் தைரியமாகப் பேச வேண்டும். நாம் நாள்தோறும் எழுதவும் பேசவும் வேண்டும். சமுக வலைத்தளத்தில் நாள்தோறும் இரண்டு கருத்துக்களைப் பதிவிட வேண்டும். நாம் பேசுவதற்கு இப்போது நல்ல தொழில்நுட்பம் இருக்கின்றது. இன்று முதல் எல்லோரும் சமுக வலைத்தளத்தில் எழுதவும் பேசவும் வேண்டும் என உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதய்பூர் காங்கிரஸ் கொள்கை பிரகடனம் பயிற்சி முகாம், மகாபலிபுரம்

அவ்வாறு செய்தால் நம் செய்தி காட்டுத் தீ போல மக்களிடம் சென்று சேரும். இந்தியாவைப் பற்றி நமக்கு உள்ள கற்பனை வேறு பாஜக வின் கற்பனை வேறு. அவர்கள் இன்னோரு இந்திய விற்கு நம்மை அழைத்துச் செல்ல முயல்கின்றனர். அமெரிக்க,இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் வங்கிகள் திவாலான போதும் நமது இந்தியாவில் ஒரு வங்கி கூட திவாலாக வில்லை மிகவும் திறமையாக அன்றைய நமது பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாகக் கையாண்டார்.

இந்தியாவில் வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது 40% பேர் தான் வேலை பார்க்கின்றனர், மீதம் உள்ள 60% பேர் வேலை பார்ப்பது இல்லை, வேலை தேடி அலைந்து அவர்கள் வெறுத்துவிட்டனர். உலகிலேயே குறைந்த அளவு 40 % வேலைபார்ப்பவர்கள் இருக்கும் நாடாக இந்தியா இருக்கின்றது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம்

வேலை பார்க்கும் பெண்ணகளின் சதவிகிதம் 9 % தான். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என மோடி தெரிவித்தார். ஆனால், பக்கோடா போடுவதும் பஜ்ஜி போடுவதும் தான் வேலை வாய்ப்பு என மோடி தெரிவிக்கின்றார். வேலை வேண்டும் என்பது தான் இந்தியாவின் மிகப்பெரிய குரலாக இருக்கின்றது.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து அவர்களுடைய கருத்து அல்ல, அது பிரதமரின் கருத்து. அவர்கள் வெறும் நாய்க்குட்டி தான், அவர்களுக்கு மாஸ்டர் பிரதமர் மோடி அவருடைய கருத்தை தான் அவர்கள் பேசி இருக்கின்றார்கள். பாஜகவில் 380 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது.

15 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது. அதில் ஒருவர் கூட மந்திரியாக இஸ்லாமியர்கள் இல்லை இது என்ன விபத்தா அல்லது தெரியாமல் நடந்த தான, இதெல்லாம் தெரிந்துதான் நடக்கின்றது. குஜராத் மாநிலத்தில் 5 கோடி குஜராத்திகளுக்குச் சுயமரியாதையை ஊக்குவித்தால் எந்த அலியும் எந்த ஜமாலியும் நம்மை எதிர்க்க முடியாது என சொன்னவர் பிரதமர் மோடி. இந்தியாவில் குடியேற்றம் செய்பவர்கள் எல்லாம் கரையான்கள் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, ஈரான், ஓமான், ஐக்கிய அரபு குடியரசு, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் இந்தியாவை கண்டித்துள்ளனர். அவர்கள் அரசியல் சமூக பங்களிப்பை இல்லாமல் ஒரு நாடு நடத்த முடியுமா இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது.

ஹிட்லர் பதவியில் இருக்கும் யூதர்களை விரோதியாகச் சித்தரித்து ஜெர்மன் மக்களை இணைத்து சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததை போல இந்தியாவில் இஸ்லாமிய மக்களை விரோதியாகச் சித்தரித்து வன்முறையாளர்களாகச் சித்தரித்துத் தொடர்ந்து பதவியில் இருக்கலாம் என நினைக்கின்றனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத், அப்துல்கலாம் பயங்கரவாதிகளா முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

உதய்பூர் காங்கிரஸ் கொள்கை பிரகடனம் பயிற்சி முகாம், மகாபலிபுரம்

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேலும் அங்கே அரசியல் சாசன சபையில் அமர்ந்து எழுதிய அரசியல் சாசனம் அந்த அரசியல் சாசனத்தை மாற்றி எழுத நினைக்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பகுதி பெரும்பான்மை கிடைத்துவிட்டால் அரசியல் சாசனத்தின் மாற்றி அரசியல் செய்ய முயற்சி மேற்கொள்கின்றனர். இதனை நாம் அனுமதித்து விட கூடாது" என பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, "உதய்பூர் கொள்கை விளக்கப் பிரகடனம் சிந்தனை அமர்வு மாநாடு நேற்றும் இன்றும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைவரும் தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் எழுச்சி தரக்கூடிய வகையில் இந்த மாநாடு அமைந்தது.

மத்திய பாஜக மதவாத அரசை எதிர்த்து வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை மறியல் போராட்டங்களை நடத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 75 கிலோ மீட்டர் நடைப்பயணம் நடத்தி மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் சிந்தனை அமர்வு மாநாடுகள் நடத்தி இந்த இரண்டு நாள் மாநாட்டில் எடுக்கப்பட்ட விவரங்களைத் தொண்டர்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

மேலும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜோதிமணி, விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், கார்த்திக் சிதம்பரம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது கருத்தை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சியினர் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details