தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ப. சிதம்பரத்தை ஒதுக்குகிறது தமிழ்நாடு காங்கிரஸ்? கலக்கத்தில் கதர் சட்டைக்காரர்கள் - தமிழ்நாடு காங்கிரஸ்

தமிழ்நாடு மக்களும், கூட்டணிக் கட்சியும் சிதம்பரத்தை ஒதுக்கியதாக கூறப்படும் சூழலில் தற்போது கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரே கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் தமிழ்நாடு காங்கிரசும் சிதம்பரத்தை ஒதுக்குகிறதோ என சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

p. chidambaram

By

Published : Sep 7, 2019, 5:27 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொருளாதார மந்த நிலை குறித்து அவர் எதுவும் வாய் திறந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவரை பாஜக அரசு கைது செய்திருப்பதாக காங்கிரஸார் குற்றச்சாட்டு கூறிவருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்களான இளங்கோவன், தங்கபாலு என எந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், ஊடகத் துறைத் தலைவர் கோபண்ணா, செல்வப் பெருந்தகை, குமரி அனந்தன் உள்ளிட்ட ஒரு சில முக்கிய தலைவர்களே பங்கேற்றனர்.

ப. சிதம்பரம்

மேலும், காலை 10 மணிக்கு தொடங்க இருந்த ஆர்ப்பாட்டம் ஆள் பற்றாக்குறையால் காலை 11.45 மணிக்கே தொடங்கியது. அப்போதுகூட காங்கிரஸ் தொண்டர்களைவிட காவலர்கள், செய்தியாளர்கள்தான் அதிகமாக இருந்தனர். ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், என்ன கோஷம் எழுப்புவது என்பதில்கூட வேறுபாடு தெரிந்தது. பின்னர் காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் அறிவுறுத்தல்படி அனைவரும் ஒன்றிணைந்து போராடினர்.

இதனிடையே ஒருவழியாக கண்டன ஆர்ப்பாட்டம் முடிவாகிய நிலையில் காவலர்கள் கைது செய்வதற்கு முன்னரே சில தொண்டர்கள் காவல் வண்டியில் ஏறினர். ஆனால், ”கைது ஆக வேண்டாம் என கட்சித் தலைமை கூறியுள்ளது” என்று முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

ப. சிதம்பரம் கைதின்போது

இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜெயக்குமார் பேசிக்கொண்டு இருக்கும்போதே மற்றொருபுறத்தில் ஒரு கூட்டம் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் என்றால் கைது வேண்டாமா? செய்தியாளர்களை பிறகு சந்திக்கலாம் என தொண்டர்கள் குமுற அது ஒரு சண்டையாக மாறியது. இறுதியாக பல குழப்பங்களுக்கு இடையே தொண்டர்கள் சிலர் தானாக காவல் வண்டியில் புலம்பலோடு ஏறிச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ப. சிதம்பரம் கைதுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அழகிரி, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளாதது அக்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பையும், பொதுமக்களும் இதில் பெரிதாக கலந்துகொள்ளாதது அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ப. சிதம்பரம்

இந்நிலையில், நீட் தேர்வில் ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்க, சிதம்பரத்தின் மனைவியான நளினி சிதம்பரமோ உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து நீட் விலக்குக்கு எதிராகக் களமாடினார். அவரது செயலுக்கு சிதம்பரம் மௌனமாக இருந்தார். அதேபோல், ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராக அவரது மௌனத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தற்போது பதிலளித்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, 2ஜி விவகாரத்தில் திமுக மீது குற்றம்சாட்டப்பட்டபோதும், 2013ஆம் ஆண்டு ஈழ விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகிய இரண்டே நாட்களில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியபோதும் சிதம்பரம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தற்போது அவரது கைதுக்கு திமுகவும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என பல்வேறு தரப்பினரால் கூறப்படுகிறது.

ப. சிதம்பரம்

இப்படி தமிழ்நாடு மக்களும், கூட்டணிக் கட்சியும் சிதம்பரத்தை ஒதுக்கியதாக கூறப்படும் சூழலில் தற்போது கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரே கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் தமிழ்நாடு காங்கிரசும் சிதம்பரத்தை ஒதுக்குகிறதோ என சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், இப்படியே போனால் தமிழ்நாட்டில் பாஜகவைவிட காங்கிரஸ் நிலைமை மோசமாகிவிடும் என்று கதர் சட்டைக்காரர்கள் கலங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details