சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது. அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச்செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாணப்பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப்பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும்.
மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 10 நபர்கள் நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.