உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அமைச்சர் அன்பழகன், தனக்கு சாதாரண காய்ச்சல்தான் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மருத்துவமனை சென்று வந்ததாகவும் கூறினார். மேலும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.