சென்னை:சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவிற்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது. அது குறித்து கருத்து கூற என்னை அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, திமுக கூட்டணியில் இருந்தது.
அப்போது தான் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதிக்குப் பிறகு தான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்துக்கு சென்றது. ஒன்றிய அரசு தான் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும் அவர், 'அப்போது தான் பெட்ரோல் - டீசல் விலை கட்டுக்குள் வரும், அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுக இதை வலியுறுத்துமா?' என்றும் கேள்வி எழுப்பினார்.