சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுவில், ’27.04 கோடி ரூபாய் செலவில் , 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், அக்கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய சூழ்நிலையில், 100 ரூபாய் வாடகை என்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதிகள், குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க உத்தரவிட்டனர்.