தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசுக்கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்குகள்... ஒத்திவைப்பு

தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

MHC
MHC

By

Published : Aug 17, 2022, 8:00 PM IST

சென்னை: நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 விழுக்காடு இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகள் தரப்பில், அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிர்பந்திக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிடப்பட்டது.

50 விழுக்காடு மாணவர்களிடம் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் விரும்பினால், தனியார் கல்லூரிகளுக்கு மானியம் வழங்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து வாதாடிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தனியார் மருத்துவக் கல்லூரிகள் லாப நோக்குடன் செயல்படக்கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனியார் கல்லூரிகளை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

விசாரணையின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 50 விழுக்காடு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துவிட்டு, மீதமுள்ள 50 விழுக்காடு மாணவர்களுக்கு அதை மானியமாக பயன்படுத்துமாறு கூறுவது எப்படி நியாயம்? எனவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய இடங்களில் போதுமான மாணவர்கள் சேராவிட்டால் என்னவாகும்? எனவும் மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், 50 விழுக்காடு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பதற்கு முன், நிபுணர்கள் குழு இதுகுறித்து ஆய்வு செய்ததா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நிபுணர் குழு அறிக்கையை வரும் 22ஆம் தேதி தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு குறித்து பரிசீலனை செய்யப்படும்.. உயர் நீதிமன்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details