தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபைக் கூட்டத்தை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு நான்கு முறை நடத்த வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதை எதிர்த்தும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தவும் அரசிற்கு உத்தரவிடக்கோரி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கடந்த ஆண்டு நவம்பரிலும், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மௌரியா கடந்த ஜனவரியிலும் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததாகவும், கரோனா ஊரடங்கு காரணமாகத்தான் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீராக இருப்பதால், கிராம சபைக் கூட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையேற்று பதில் மனுத்தாக்கல் செய்ய ஒரு வார கால இறுதி அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க:வனவிலங்கு குற்றங்களை தடுக்க சிறப்பு நீதிமன்றம்! - வனத்துறைக்கு உத்தரவு!