அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இணையதள வசதியை மேம்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆழ்கடல் வழியாக ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கும் திட்டத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொலைத்தொடர்புத் துறை நிதியில், ஆயிரத்து 224 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேர், ரங்கட், ஹாவ்லாக், லாங் ஐலாண்ட், ஹட் பே, கார் நிக்கோபார், காமோர்டா, கேம்ப்பெல் பே ஆகிய தீவுகளுக்கு ஆழ்கடல் மூலம் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பொருத்தப்படும். ஜூன் மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் அங்கு அதிவிரைவு இணையதள சேவைகளை வழங்க முடியும். இந்தத் திட்டத்தை ஒப்பந்தம் மூலம் செயல்படுத்த ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடர்பு அதிக செலவு ஏற்படுத்துவதாக இருப்பதோடு, அங்குள்ள தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இல்லை என்பதால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.