அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் 7ஆம் தேதி வெளியாகும் என நேற்று நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குப்பின் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை வந்தனர்.
தலைமைச் செயலகத்தில் கரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. 2021இல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் தொடர்பான குழப்பத்தால் ஆட்சி கலையாது. தனிப்பட்ட முறையில் துணை முதலமைச்சரை சந்திக்க வந்தேன்" என்றார்.